கட்டுமான தொழிலாளர்களின் வாரியத்தில் உள்ள நிதியை வேறு திட்டத்திற்கு ஒதுக்கீடு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பேட்டி

Author: kavin kumar
21 August 2021, 4:53 pm
Quick Share

மதுரை: கட்டுமான தொழிலாளர்களின் வாரியத்தில் உள்ள நிதியை வேறு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் மதுரையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் தொழில் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மற்றும் உதவிகள் வழங்கும் விழா மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளாகள் நல வாரிய தலைவர் பொன்குமார், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 55 பயனாளிகளுக்கு ரூ.1,10750 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தலைவர் பொன்குமார்:- அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்தியாவில் 90 விழுக்காடு உள்ளனர். அவர்களைப் பாதுகாக்க பல்வேறு நல வாரியங்களை அமைத்த முதல் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் 50 நாட்களில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை எளிமைப்படுத்த பல்வேறு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.தொழிலாளர்களின் மிகப்பெரிய கோரிக்கையாக இருப்பது கிராம நிர்வாக அலுவலர் இடமிருந்து சான்றிதழ் பெறுவது மிக சிரமமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். மதுரையில் மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கையால் 5,000 விண்ணப்பங்கள் பணி சான்றுடன் திரும்ப நல வாரியத்திற்கு வந்துள்ளது. உழவர் திட்டத்தில் அட்டை வாங்கிய போது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களையும் அதில் சேர்த்துள்ளனர். குடும்பத்தின் தலைவர் விவசாயியாக இருப்பார் மகன் கட்டுமான தொழிலாளர் ஆக இருப்பார் மருமகள் தையல் தொழிலாளர் ஆக இருப்பார் விவசாய அட்டையில் அனைத்து நபரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும்.

அதில் இருக்கக்கூடிய பெயரை நீக்கினால்தான் சம்பந்தப்பட்ட வாரியத்தில் பெயர்களை சேர்க்க முடியும். அந்தப் பெயர்களை நீக்க கோரினால் பெயர்களை நீக்கி தருவது இல்லை. இதனால் ஊழவு தொழில் செய்பவருக்கு மட்டும் தனி அடையாள அட்டை வழங்க உள்ளோம். இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சரும், முதலமைச்சரும் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள், எனவே இணையவழியில் பதிவு முறையை எளிமையாக வர இருக்கிறது.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்கங்களுக்கு கணினி இயக்குபவர்கள் மற்றும் உதவியாளர்கள் 180 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுமான தொழிலாளர்களின் வாரியத்தில் உள்ள நிதியை வேறு அமைப்பிற்கு மாற்றக்கூடாது என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளது. கடந்த ஆட்சியில் சட்டத்தில் சொல்லப்படாத சில திட்டங்களுக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை சட்டத்திற்குப் புறம்பான செயல் இதனை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு படம் எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதல்வரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழில் சங்கங்களின் கட்டாய பதிவு முறை கொண்டு வரப்பட உள்ளது. பதிவு செய்தவர்கள் மட்டுமே வேலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக தனி சட்டம் ஏற்றப்பட உள்ளது. இதன் மூலம் அனைத்து தொழிலாளர்களையும் வாரியத்தின் கீழ் கொண்டு வர முடியும்.தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்தால் வாரியத்தின் மூலம் ஐந்து லட்சம் சாலை விபத்தில் இறந்தால் 2 லட்சம் ஓய்வூதியம் 1000 ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது இவை அனைத்தும் தொகை உயர இருக்கிறது.

2011 ஆம் ஆண்டு கட்டுமான தொழிற்சங்கத்தில் 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது செயலில் இருக்கும் உறுப்பினர்கள் 13 லட்சம் என்று கூறுகின்றனர். இதற்காகவும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இழப்பீடு என்பது வாரியத்திற்கு இல்லை தொழிலாளர்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிற்சங்க வாரியத்தின் நிதி ஆதாரமாக 4,000 கோடி உள்ளது. ஆங்கிலேயர் காலத்து சட்டத்தின்படி ஒன்றிய அரசு வாரியங்கள் அமைத்து நிதி வசூல் செய்ய முடியும் அவ்வாறு செய்தால் ஜிஎஸ்டி போல் பணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படும் இந்த நிதி தொழிலாளர்களுக்கு பயனில்லாமல் போகக்கூடிய நிலை இருக்கிறது. இதுவும் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் பின்னடைவு. தமிழ்நாட்டில் பொருத்தவரை உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டம் தான் இந்தியாவில் சிறந்த சட்டம், ஒன்றிய அரசின் வாரியத்தின் கீழ் நமது வாரியம் செல்லக்கூடாது என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழ்நாடு சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த வாரியம் இயங்குவதற்கான அனுமதியைப் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வரிடம் வைத்துள்ளோம்.தொழிலாளர்கள் வாரியம் எளிமை ஆக்குவதற்கு ஆவணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.அடுத்த மூன்று மாதத்தில் எந்த ஒரு கேட்டு மனு நிலுவையில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட முடியும்.கடந்த ஆண்டுகளில் தற்காலிக தொழிலாளர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து அவர்களே அதை ரத்து செய்துள்ளனர். பணியாளர்களை நிரந்தரம் படுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.தமிழக அரசின் கடனை சரிசெய்வதே மிகப்பெரிய பணியாக இருக்கிறது கடந்த ஆட்சியில் நிதிநிலையை கையாளத் தெரியாத சூழ்நிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் கடன் இருந்து வருகிறது என்றார்.

Views: - 383

0

0