மக்காச்சோளம் அமோக விளைச்சல்: விவசாயிகள் மகிழ்ச்சி

22 September 2020, 6:45 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், புன்செய் புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது மக்காச்சோளம் பயிர்கள் செழிப்புடன் வளர்ந்து சோள கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆறு மாத கால பயிரான இப்பயிர் கடும் கோடையிலும் தண்ணீரின்றி வளரும் தன்மை கொண்டது. ஒரு ஏக்கர் நிலத்தில் 12 மூட்டை சோளம் கிடைப்பதால் செலவும் குறைவு, அதிக வருமானம் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பராமரிப்பு பணி குறைவு காரணமாக இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் சோளம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோதுமை, அரிசிக்கு அடுத்தாற்போல் பொதுமக்கள் அதிகளவில் உணவாக பயன்படும் சோளப்பயிர்கள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. நீரிழிவு, செரிமான குறைபாடுகள், ரத்த சோகையை போக்கும் தன்மை இந்த சோளத்திற்கு உண்டு. கண் குறைபாடுகளை போக்கும் பீட்டா கரோட்டின் சக்தி இதில் அதிகளவில் உள்ளது. மேலும் இவைகள் கால்நடை உணவாகவும், தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகவும் பன்முக பயன்பாடுகள் கொண்டது. இந்த சோளப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளதால் எதிர்பார்த்ததைவிட கூடுதல் மகசூல் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சோளப் பயிர்கள் சாகுபடி செய்த சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.