விசிக பொருளாளர் மீது உரிய நடவடிக்கை வேலூர் இப்ராஹிம் புகார்

13 January 2021, 5:38 pm
Quick Share

சேலம்: தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவர் மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவாக பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வேலூர் இப்ராஹிம் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில், தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் பொறுப்பு வகித்து வருகிறேன். நான் கடந்த ஐந்து ஆண்டு காலமாக மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதோடு தமிழகம் முழுவதும் மதநல்லிணக்க பிரச்சாரத்தையும் செய்து வருகிறேன். என்னுடைய இந்த பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சிகளின் தூண்டுதலினால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் சில தீவிரவாத சக்திகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஒரு சில இடங்களில் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 27.12.2020 அன்று காஜாமைதீன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் என்னை ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்று குறிப்பிட்டு தகாத வார்த்தைகளினால் சில குறிப்புகளை கூறியதோடு அதுமட்டுமல்லாமல் நீ சேலம் வந்து பார் என்று கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்டுள்ளார். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன் என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் ராமன் அவர்களிடம் வழங்கிய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 5

0

0