ஒரே வீதியில் 3 பேருக்கு தொற்று உறுதியா? அந்த பகுதி தனிமைப்படுத்தப்படும்

29 September 2020, 7:03 pm
Quick Share

கோவை: கோவையில் ஒரே வீதியில் 3 பேருக்கு தொற்று உறுதியானால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்றும் கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவுதலை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரே வீதியில் 3 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி (வீதி) கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அடுத்த 14 நாட்கள் அந்த பகுதி (வீதிகள்) தடுப்புகள் கொண்டு அடைக்கப்படுகிறது. மாநகராட்சி பணியாளர்களை கொண்டு அந்த பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும், உள் இருக்கும் நபர்கள் வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகள் மற்றும் இதர கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் தற்போது வரை 179 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கோவை மா நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.