வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்த படுகிறதா…??? சமூக ஆர்வலர்கள் கேள்வி…!!!

15 July 2021, 2:32 pm
Quick Share

திண்டுக்கல்: அரசு அனுமதியின்றி சிறுமலை வனப்பகுதிகளில் மரங்கள் வெட்டி கடத்த படுகிறதா அல்லது அரசு அனுமதி கொடுத்து மரங்கள் வெட்டப்பட்ட காடுகளில் மீண்டும் அரசு கூறியதுபோல் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளத என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுமலை ஊராட்சி. இப்பகுதியானது கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சியாக உள்ளது. பூமியிலிருந்து சுமார் 1,600 மீட்டர் உயரத்தில் இப்பகுதி உள்ளது. சிறுமலை, அகஸ்தியர் புரம், தென்மலை, பழையூர், புதூர், பொன்னுறுக்கி, தாலகடை போன்ற சிறுசிறு மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. இங்கு மிளகு காபி அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் வாழை, ஆரஞ்சு, பலா, எலுமிச்சை போன்ற பழங்களும், பீன்ஸ், அவரை உட்பட பல்வேறு காய்கறிகளும் இங்கு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மலைப்பகுதி அளவில் 50% வனத்துறைக்கு சொந்தமான பகுதி, அது இங்கு பல்வேறு அரிய வகை மரங்களும் பல நூற்றாண்டுகள் கடந்த மரங்களும் உள்ளன.

இப்பகுதியில் தொடர்ந்து அரசு அனுமதி இல்லாமல் மரங்கள் கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் அரசு அனுமதியோடு பட்டா நிலங்களில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக அரசு அறிவித்தது, போல் மரக்கன்றுகள் நட வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் தினமும் மரங்கள் வெட்டப்பட்டு இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கூட இப்பகுதியில் அதிக அளவில் மரம் கடத்தப்பட்டதா வனத்துறை அதிகாரி மகேந்திரன் தலைமையில் குழு ஒன்றை நியமித்து சிறுமலை பகுதிகளில் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடைபெற்றது.

தற்போதும் இதேபோல் மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி சமூக ஆர்வலர் ஜெகநாதன் நம்மிடம் கூறும்பொழுது, சிறு மலையானது கிழக்கு மலைத் தொடர்ச்சியில் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மலை உள்ளது. இங்கு பல அரிய வகை மரங்கள் உள்ளன. இந்நிலையில் மரங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதேபோல் வனத்துறையால் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட காடுகளில் ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் அதே இடத்தில் இரண்டு கன்றுகள் வைக்க வேண்டும் என நீதிமன்றமும் அரசும் கூறி உள்ளது.

ஆனால் இதை எதையுமே வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் பின்பற்றுவது கிடையாது மறைந்த ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக் கூறியதுபோல், இந்தியா முழுவதும் தொடர்ந்து மரங்கள் வைத்தால்தான் அடுத்து மனிதன் வாழ முடியும் மரங்களை வெட்டி விட்டால் மழையும் இருக்காது மனிதனும் இருக்க மாட்டார்கள் என்று கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதேபோல் தற்போதைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் வனத்துறையினர் வெட்டப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடுவது கிடையாது.

அதே போல் அரசு அனுமதி இல்லாமல் பல இடங்களில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகமும் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர் திலீப் அவர்களிடம் மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அரசால் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் மரங்களில் பாதி மரங்களுக்கு வனத்துறையால் எந்த ஒரு நம்பரும் போடாமல் லாரிகளில் கடத்தப்படுகிறது என்ற கேள்விக்கு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Views: - 134

0

0