முழு ஊரடங்கை மீறி வியாபாரம் செய்த 26 கடைகளுக்கு சீல்
23 August 2020, 6:15 pmஅரியலூர்; ஜெயங்கொண்டம் நகராட்சியில் முழு ஊரடங்கை மீறி வியாபாரம் செய்த 26 கடைகளுக்கு சீல்வைத்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து 10 ஆயிரத்து 200 அபராதத்தையும் வசூலித்தனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருவதாக ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட ஆணையர் தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் விருத்தாசலம் சாலை, சிதம்பரம் சாலை, அம்பேத்கர்நகர் மற்றும் செந்துறை சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்ற மீன் உள்ளிடட்ட இறைச்சி கடைகள், டீ கடை, பூ கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்ததையடுத்து அரசின் உத்தரவை மீறி திறந்திருந்த 26 கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். மேலும் அவர்களிடமிருந்து 10 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது. அரசின் உத்தரவை மீறி கடைகள் திறந்தால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விளம்பர வாகனம் மூலம் எச்சரிக்கையும் செய்யப்பட்டு வருகின்றது.