தொடர் மழையினால் ஆரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…
2 August 2020, 2:58 pmதிருவள்ளூர்: பொன்னேரி ஆரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து பெய்த மழையினால் ஆற்றில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. திருத்தணி பள்ளிப்பட்டு பகுதியில் அதிகபட்சமாக 7.5 சென்டி மீட்டர் மழை பதிவானது. ஏற்கனவே ஆந்திர மாநிலம் கிருஷ்ணா புரத்தில் உள்ள அம்மா பள்ளி அணைக்கட்டில் அம் மாநில பொதுப்பணித் துறையினர் அணை நிரம்பியதால் தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டு உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் யாரும் ஆற்றை கடக்க நீரில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பொன்னேரி சுற்றுவட்டாரங்களில் நேற்று நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு தற்போது பொன்னேரி பகுதி ஆரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரத்து வங்கி குன்னமஞ்சேரி சின்னகாவனம் மேம்பாலங்கள் அடியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக அளவில் ஆரணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை நீரால் தற்போது லட்சுமிபுரம் அணைக்கட்டு நோக்கி ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.
இதனால் கணிசமான அளவு நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பொதுப்பணித் துறையினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பொது முழு ஊரடங்கு என்பதால் ஆரணி ஆற்றில் செல்லும் தண்ணீரை பார்ப்பதற்கு அல்லது தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு வரக்கூடாது என காவல்துறையினரும் எச்சரித்துள்ளனர்.