ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க செல்லும் மூதியவர்களிடம் நூதன முறையில் மோசடி: கோவையில் சிக்கிய உதவி ஒளிப்பதிவாளர்

Author: Udhayakumar Raman
17 September 2021, 11:31 pm
Quick Share

கோவை: கோவை மாநகர் பகுதிகளில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க மூதாட்டிகள், முதியவர்கள் செல்லும்போது அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க மூதாட்டிகள், முதியவர்கள் செல்லும்போது அவர்களை பின்தொடர்ந்து செல்லும் ஒரு ஆசாமி, அவர்களுக்கு பணத்தை எடுக்க உதவி செய்வது போல் நடிப்பார். ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீடு எண்களை முதியவர்களிடம் கேட்டு பணத்தை எடுப்பதாக கூறி, அந்த ஏ.டி.எம். கார்டை வைத்துக்கொண்டு, கையில் கொண்டு வந்த செயல்படாத ஒரு ஏ.டி.எம். கார்டை கீழே போடுவார். பின்னர் பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறி அதனை கொடுத்துவிட்டு செல்வார். முதியவர்களிடம் நைசாக அபேஸ் செய்த ஏ.டி.எம். கார்டை வைத்து மற்ற மையங்களுக்கு சென்று பணத்தை எடுத்து மோசடி செய்வதாக ராமநாதபுரம், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான புகார்கள் வந்தன.இந்த ஆசாமியை பிடிக்க ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்தநிலையில் புலியகுளம், தாமுநகர் பகுதியில் ஜெயராஜ் என்பவரை கத்திமுனையில் மிரட்டி, அவரிடம் ரூ.1000 மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்த முகமது தம்பி என்ற மகி(வயது33) என்ற வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.இவரிடம் விசாரணை நடத்தியபோது ஏராளமான ஏ.டி.எம். மையங்களில் முதியவர், மூதாட்டிகளின் ஏ.டி.எம். கார்டுகளை அபேஸ் செய்து பணத்தை திருடியது தெரியவந்தது. இவரிடம் இருந்து 10 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான முகமது தம்பி, அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர். இவர் தம்பி, சித்திரை, செவ்வானம், லாபம் ஆகிய படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். மேலும் குறும்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்ததாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான முகமது தம்பி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 160

0

0