நகராட்சி மேற்பார்வையாளர் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்க கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!!
20 February 2021, 1:57 pmநீலகிரி : உதகை நகரில் நகராட்சி மேற்பார்வையாளரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உதகை நகரில் சுமார் 36 வார்டுகளிலும் நகராட்சி சார்பில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் உதகை அருகே உள்ள தலையாட்டுமந்து எனும் பகுதியில் மாத தூய்மை பணிக்காக மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் பணியை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியில் கடை நடத்தி வருபவர் கடையின் முன்புறம் குப்பைகளை வீசியதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட மேற்பார்வையாளர் குப்பைகளை வெளியே வீசினால் அபராதம் விதிப்பதோடு கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடையின் உறவினர் ஒருவர் மேற்பார்வையாளரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மேற்பார்வையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தாக்கிய நபர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இன்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையில் போராட்டம் நடத்தினர்.
மேலும் மேற்பார்வையாளரை தாக்கிய நபரை கைது செய்யும் வரை நாங்கள் தூய்மை பணிகளை மேற்கொள்ளப் போவதில்லை என கூறியுள்ளனர். இதனால் உதகை நகரில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
0
0