வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகையில் ரூ.1 கோடி மதிப்பில் மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு

26 November 2020, 9:04 pm
Quick Share

மதுரை: மதுரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்களால் அடகு வைக்கப்பட்ட தங்க நகையில் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் உட்பட 9 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மதுரை வடக்குவெளி வீதியில் அமைந்துள்ளது பேங்க் ஆப் பரோடா. இந்த வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் உட்பட 9 பேர் இணைந்து வங்கியின் வாடிக்கையாளர்களால் அடமானம் வைக்கப்பட்ட 2 ஆயிரத்து162 கிராம் தங்க நகைகளின் மீது தவறான முறையில் மோசடி செய்ததாக, அதே வங்கியின் மண்டல மேலாளர் சுதாகரன் அளித்த புகாரின் பேரில் மதுரை விளக்குத்தூண் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களால் அடமானம் வைக்கப்பட்ட நகையை தவறாக கையாண்டு அதன் மூலம் 1 கோடியே 11 லட்சத்து 28 ஆயிரத்து 910 ரூபாய் மோசடி செய்ததாக, வங்கி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் ஹரிஹர புத்திரன், குமார பாண்டியன், முத்துக்குமார், வளர்மதி, திவ்யா, லட்சுமி மற்றும் அருண் முத்துக்குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மோசடி குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நம்பிக்கையுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகளில் வங்கி ஊழியர்களே மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0