வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தை கண்டித்து மறியல்: திருச்சியில் பாஜகவினர் கைது

6 November 2020, 4:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தை கண்டித்து திருச்சியில் மறியலில் ஈடுப்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பர் கூட்டம் என்ற இணையதளத்தில் முருகனை குறித்தும், கந்தசஷ்டி பாடல் குறித்தும் தவறான விமர்சனம் வந்ததையடுத்து கருப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த இணையதள உரிமையாளர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இணையதளத்தை முடக்கியதுடன் இணையதளத்தில் வெளியான பல்வேறு பதிவுகளையும் அகற்றப்பட்டன. பாஜகவினர் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக திமுக மற்றும் பலர் ஆதரிப்பதாக கூறி பாஜக தலைவர் முருகன் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திகவினரின் ஹிந்து விரோத போக்கை முகத்திரையை கிழிக்கும் வகையில் விரைவில் வேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவித்தார்.

இன்று வேல் யாத்திரை திருத்தனியில் துவங்கி டிசம்பர் 6ம் தேதி முடியும் வகையில், தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு அமைப்பினர் வேல் யாத்திரைக்கு அனுமதி தர கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவினர் நீதிமன்றத்திற்கு சென்றனர். ஆனால் தமிழக அரசு அனுமதி வழங்க முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதை தொடர்ந்து தமிழக அரசு நேற்று யாத்திரைக்கு தடை விதித்தது. இந்த தடையை கண்டித்து இன்று பாஜக வினர் தடை மீறி யாத்திரை செல்வதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருத்தணி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே சென்னையிலிருந்து மாநில தலைவர் முருகன் வேலுடன் திருத்தணியில் முருகனை தரிசிப்பதாக கூறி புறப்பட்டார். இதன் காரணமாக திருத்தணியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட காலை கூடினர். சுமார் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் கூடி இருந்த அவர்கள் திடீரென முழக்கமிட்டவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். ஆனால் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அதற்கு எதிர்புறமாக சாலையில் கையில் வேலை ஏந்தி கொண்டு பேரணியாக சென்றனர்.

பேரணியின்போது திடீரென சிலர் சாலையில் ஓடத் தொடங்கியதால் காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்றனர். அப்போது சிறிது தூரத்தில் காவல் துறையினர் அவர்களை தடுத்ததால் காவல் துறையினருக்கும் பாஜகவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த சாலையிலையே அமர்ந்தும், படுத்தும், சாலை மறியலில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். சிறிது நேரத்திற்கு பின்பு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Views: - 18

0

0