பாஜக தொண்டர்கள் விநாயகர் சிலைகளை வீடுகள் முன்பு பிரத்திஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

Author: Udhayakumar Raman
5 September 2021, 7:47 pm
Quick Share

நெல்லை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு அனுமதி தராத நிலையில் பாஜக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன்பு பிரத்திஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள் என்றும், தனிமனித உரிமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சியின் 150வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை டவுணில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மற்றும் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், மாநில துணைத் தலைவருமான நயினார்நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சிதம்பரனாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மணிமண்டபத்திற்கு வெளிப்பகுதியில் கேக் வெட்டி அவரது படத்தை திறந்து வைத்தனர். இதனை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது;- இதுசரித்திர நாள், சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சியின் 150வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. வ.உ.சிதம்பரபிள்ளை ஒரு சாதாரண மனிதர் கிடையாது, பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் விட்ட ஒரு சாதனை நாயகன் ஆவார். இன்று அவர் புகழ் நாடுமுழுவதும் பரவி உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்கமால் தமிழக அரசு முரட்டு பிடிவாதமாக இருக்க காரணம் என்ன என்று தெரியவில்லை. பாஜக தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 முதல் 12 ந்தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். இது தனிமனித உரிமை இதனைத் தடுக்க யாருக்கும் அனுமதியில்லை.

மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போல் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கட்டுபாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும், ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முதல்வர், அமைச்சர்கள் அதிகாரிகள் முடிவு செய்யக்கூடாது. ஜனநாயக முறையில் இதனை ஏற்று கொள்ள முடியாது. இன்னும் காலம் கடக்கவில்லை, வழிபட நடத்த அனுமதிக்கலாம். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது, அதில் பாஜகவும் கலந்து கொள்கிறது கூட்டத்தின் நிறைவுக்கு பின் இது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். மாநில அரசு பாரதியார், வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிப்பதை பாஜக வரவேற்கிறது என்றும் கூறினார் .

Views: - 115

0

0