காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல்: மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் கைது
Author: kavin kumar21 August 2021, 11:11 pm
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வடமதுரை அருகே ரயில் தண்டவாளம், திண்டுக்கல் அரசு மருத்துவமனை, திண்டுக்கல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும் மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து உடனடியாக வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடமதுரை போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பின் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியதில் போன் செய்த நபர் திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தில் இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பழையூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பதும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு மனநிலை பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் சந்திரசேகர் மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
0
0