சைக்கிளில் சென்ற சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை

Author: Udhayakumar Raman
30 November 2021, 6:12 pm
Quick Share

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் சைக்கிளில் சென்ற சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் தெற்கு காலனியைச் சேர்ந்த பாலகணேசன் மகன் மகேஸ்வரன் (13) என்பவர், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று கனமழை அறிவிப்பு காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் மகேஸ்வரன் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஒரே சைக்கிளில் மூவரும், ஓட்டப்பிடாரத்தில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக, புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் உள்ள பாலம் அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென மகேஸ்வரன் சைக்கிளிலிருந்து கீழே இறங்கி, கிறக்கமாக இருப்பதாக கூறி கீழே படுத்து கை, கால்களை உதறியுள்ளார்.

இதையடுத்து சிறுவர்கள் அருகில் இருந்தவர்களிடம் தண்ணீர் வாங்கி தெளித்தும் மகேஸ்வரன் மயக்க நிலையில், இருந்த போது, அவ்வழியாக வந்த கச்சேரிதளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மகேஸ்வரனை சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதையடுத்து மகேஸ்வரனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு மருத்துவரிடம் கேட்டபோது, மகேஸ்வரன் இறந்துவிட்டதாக மருத்துவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலகணேசன் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 67

0

0