பெரம்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி:15 பேர் மீட்பு…

Author: kavin kumar
22 November 2021, 7:37 pm
Quick Share

சென்னை: பெரம்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் காயமடைந்த 3 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெரம்பூர் செம்பியம் சபாபதி முதலி தெருவில் சுமார் பத்து குடும்பங்கள் ஒரே கட்டிடத்தில் வசித்து வருகின்றனர். ராஜேஷ் , சக்திவேல் , ஞானசேகர் ஆகியோருக்கு சொந்தமான இந்த வீட்டில் கீழ்த்தளத்தில் வீட்டு உரிமையாளர்களும் முதல் மாடியில் மூன்று வாடகைதாரர்களும் இரண்டாவது மாடியில் இரண்டு வாடகைதாரர்களும் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று காலை தங்களது பணிகளை முடித்துக் கொண்டு சில பேர் வழக்கம் போல் வேலைக்கு சென்று உள்ளனர். இன்று கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள பால்கனி சுவர் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இடிந்து கீழே விழுந்தது.

இதனால் வீட்டிலிருந்த நபர்கள் அலரி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காயம் அடைந்தவர்கள் மற்றும் மயக்கம் அடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காயமடைந்த சுதா , மோகனா , ஜெயலட்சுமி என்ற மூன்று பெண்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடம் சமீபத்தில் மூன்று மாத காலத்திற்கு முன்னர் தான் புதுப்பிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டிடத்தில் நீர் தேங்கியதால் அந்த ஈரப்பதம் ஆனது கட்டிடத்தின் உள்ளே ஊடுருவி கலவையானது சரிவர இறுக்கமாக பிடிமானம் இல்லாததால் கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 196

0

0