கருணை அடிப்படையில் வாரிசு பணி கோரிய மனுவை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு ரத்து

19 September 2020, 9:17 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: கருணை அடிப்படையில் வாரிசு பணி கோரிய மனுவை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வேம்பாரைச் சேர்ந்த பவானிமணி மாரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” என் தாய் தமிழ்பொன்மணி. அரசு உதவி பெறும் கன்னிராஜபுரம் சத்திரிய நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பணிக்காலத்தில் கடந்த 26.9.1999ல் இறந்தார். இதனால், எனக்கு கருணை அடிப்படையில் வாரிசு பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், காலிப்பணியிடம் இல்லையெனக் கூறி எனது மனுவை நிராகரித்து விட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்”என கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்,” அரசாணையை தவறாக புரிந்து கொண்டு நிராகரித்துள்ளனர். எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் தந்தையும், தனது மகளுக்கு பணி வழங்கக் கோரி கடந்த 2000ம் ஆண்டிலேயே மனு அளித்துள்ளார். தற்போது 20 வருடத்திற்கு மேலாகிவிட்டது. இந்த பணி நியமனமே மனுதாரர் குடும்பத்தில் ஒளியாக இருக்கும். இறக்கும் ஒரு ஊழியரின் குடும்பம் பாதிப்பதை தவிர்க்கவே கருணைப் பணி வழங்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற பணி நியமனங்களில் காலதாமதம் கூடாது. எனவே, மனுதாரரின் தகுதிக்கேற்ப பணியை 4 வாரத்திற்குள் வழங்க பள்ளிகல்வித் துறை செயலர், துவக்க கல்வி இயக்குநர் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். 

Views: - 8

0

0