விதிமுறைகளை மீறி கூட்டம் கூடிய காங்கிரஸ் கட்சியினர் 10 பேர் மீது வழக்கு பதிவு….

16 August 2020, 4:06 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் விதிமுறைகளை மீறி கூட்டம் கூடிய காரணத்திற்காக காங்கிரஸ் கட்சியினர் 10 பேர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76-வது பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 20-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், ராஜீவ் காந்தி ஜோதி பயணக் குழுவின் தலைவருமான எஸ்.எஸ்.பிரகாசம் குழு சார்பில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து ராஜீவ் காந்தி பிறந்த தின ஜோதி பயணம் தொடங்க உள்ளது. இந்த ஜோதி தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கோவா, மஹாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் வழியாக, ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லியைச் சென்றடைகிறது.

அங்கு 20-ம் தேதி நடைபெறவுள்ள ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் இந்த ஜோதி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் வழங்கப்படும். இந்நிலையில் ஊரடங்கு மற்றும் 144 தடை சட்ட விதிகளை மீறி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு இல்லத்தில் அதிகமாக ஆட்கள் கூடி ஜோதியை எடுத்துக்கொண்டு வந்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிரகாசம் மற்றும் அவரது குழுவினர் கர்நாடக மாநிலத்திற்கு சென்னை – பெங்களூர் மார்க்கமாக கிளம்ப முயன்றனர். இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் உரிய அனுமதியுடன் தான் தமிழகத்திற்குள் வந்து இருக்கிறார்களா என்பதை விசாரிக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர் .

அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அங்கிருந்து பிரகாசம் கர்நாடகம் நோக்கி கிளம்பினர். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வந்த காரை காஞ்சிபுரம் அருகே பொன்னேரி கரை என்கின்ற இடத்தில் மடக்கிப்பிடித்து காரிலிருந்து பிரகாசத்தை இறக்கி சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக அங்கு உள்ள புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர் . அதன் பிறகு கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வருவதற்கு உரிய அனுமதி பெற்றிருப்பதை அறிந்த போலீசார் அவர்களை விடுவித்தனர்.

இந்நிகழ்வு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீபெரும்புதூரில் விதிமுறைகளை மீறி கூட்டம் கூடிய காரணத்திற்காக காங்கிரஸ் கட்சியினர் 10 பேர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என ஏஎஸ்பி கார்த்திகேயன் தெரிவித்தார்.

Views: - 0

0

0