மாநிலங்களுக்கு இடையே சென்று வர இ-பாஸ் ரத்து செய்யக்கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
16 September 2020, 7:36 pmமதுரை: மாநிலங்களுக்கு இடையே சென்று வர இ-பாஸ் தேவை என்பதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளார்.
தேனியை சேர்ந்த ஹரிஹரசுதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,”கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மத்திய வெளியிட்ட அறிவிப்பில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் தேவை இல்லை என குறிப்பிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மாநிலத்திற்குள் வந்து செல்ல இ-பாஸ் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே மாநிலங்களுக்கு இடையே சென்று வர இ-பாஸ் முறை கட்டாயம் என்பதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்”என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.