ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை கோரி வழக்கு: தஞ்சை மாவட்ட ஆட்சியர், கல்லணை பாசன கால்வாய் செயற்பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ்
25 September 2020, 7:35 pmமதுரை: தஞ்சை, பொன்னவராயன்கோட்டை பகுதியில் சொந்த தேவைக்காக பெறப்பட்ட அனுமதியை வைத்து மண் அள்ளி முறைகேடாக விற்பனை செய்த ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை கோரி வழக்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியர், கல்லணை பாசன கால்வாய் செயற்பொறியாளர் ஆகியோருக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்த சக்கரவர்த்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” எங்கள் ஊராட்சித் தலைவராக கீதாஞ்சலி என்பவர் உள்ளார். இவரது கணவர் இளமுருகன். இவர்கள் தங்களது சொந்த தேவைக்காக பெரியகுளத்தில் மண் அள்ள தாசில்தாரிடம் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், பொதுப் பணித்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அனுமதியின்றி கடந்த ஜூன் 11 முதல் 20 நாட்களாக சட்டவிரோதமாக 20 லட்சம் மதிப்புள்ள மண்ணை வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளனர்.
சொந்த தேவைக்காக அள்ளுவதாக பெறப்பட்ட அனுமதியை வைத்து மண் அள்ளி முறைகேடாக விற்பனை செய்துள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவரே இவ்வாறு செய்தது விதிமீறலாகும். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு விதிகளை மீறி நடந்து கொண்ட ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு தஞ்சை மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை சார்பு ஆட்சியர், வட்டாட்சியர், கல்லணை பாசன கால்வாய் செயற்பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.