தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதி வழங்க கோரிய வழக்கு: ஆட்சியர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பதிலளிக்க உத்தரவு

14 September 2020, 8:04 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: திருச்சி தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியை வழங்க கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் சங்க தலைவர் செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” திருச்சி மாவட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், இயங்குகின்றன. இதில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக பணி புரிந்து வருகின்றனர். தற்போது கொரானா, நோய் தொற்று காரணமாக பேருந்துகளை இயக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் தொழில் இல்லாததால் ஆயிரத்திற்கும், மேற்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் மே, ஜூன், ஜூலை, ஆகிய மாதங்களில் குடும்பம் நடத்துவதற்கே சிரமப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதனை வழங்காததால், கடந்த ஜூலை 29 அன்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

அதில் நிவாரண நிதி வழங்க ஒப்புக் கொண்ட பேருந்து உரிமையாளர்களில் 50 சதவீதத்தினர் இந்த பணத்தை வழங்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, நிவாரண நிதி வழங்காத தனியார் பேருந்து உரிமையாளர்கள், தனியார் பேருந்து ஓட்டுனர், மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியை வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.