தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கக்கோரி வழக்கு: பதில்மனு தாக்கல் உத்தரவு…

6 August 2020, 6:26 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கக்கோரி வழக்கில் தமிழக தலைமை செயலர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளார்.

தட்டச்சு, கணினி பயிற்சிப்பள்ளிகளின் சங்க மாநில தலைவர் செந்தில்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில்,” கொரோனா நோய் தொற்றால் அனைத்து பயிற்சி மையங்களும் மூடப்பட்டன. மார்ச் 25ஆம் தேதி முதல்  தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளும் மூடப்பட்டன. சுமார் பத்தாயிரம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த பணியை சார்ந்தே தங்களின் வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், தற்போது வரை இந்த மையங்களை திறப்பது தொடர்பாக எவ்வித தளர்வுகளும் வழங்கப்படவில்லை. இது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை.

ஆகவே, பத்தாயிரம் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தட்டச்சு,  மற்றும் கணினி பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “தமிழகம் முழுவதும் 2000க்கும் அதிகமான பயிற்சி பள்ளிகள் உள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதால் தற்போது திறக்க அனுமதிக்க இயலாது” என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில்,” டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபமாக ஜிம்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, உணவகங்களும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  தட்டச்சு பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. வாரணத்தொகையும் எதுவும் வழங்கப்படவில்லை. ஆகவே, தட்டச்சு பயிற்சிப் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து தமிழக தலைமை செயலர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Views: - 22

0

0