ஆக்கிரமிப்பு அகற்ற கோரி வழக்கு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு…
5 September 2020, 8:23 pmமதுரை: ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற்று 8 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை சேர்ந்த வேல்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- கலப்பைபட்டி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குடிநீர், பேருந்து நிறுத்தம், கால்நடை மருத்துவ மனை, விளையாட்டு திடல் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. எங்கள் பல அடிப்படை தேவைகளை அருகிலுள்ள கிராமங்களில் தான் நிறைவேற்றுகிறோம். எங்கள் ஊரில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளன.
இந்நிலையில், எங்கள் மாவட்டத்தில் ஊரக விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கள் ஊரில் போதுமான அளவு அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லையெனக் கூறி ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டனர். ஆனால், ஆக்கிரமிப்பு களை அகற்றி அடிப்படை வசதிகளை ெசய்யக் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் கிராமத்திலுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,
பேருந்து நிறுத்தம், கால்நடை மருத்துவமனை, விளையாட்டு மைதானம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற்று 8 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
0
0