ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில உதவிகள் வழங்கப்படும் : சென்னை மாநகராட்சி 104வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி

Author: Babu Lakshmanan
16 February 2022, 12:50 pm
Quick Share

சென்னை மாநகராட்சி 104வது வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி 104வது வார்டு பகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அப்துல் ஜலீல் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

பூப்பந்து மட்டை சின்னத்தில் வாக்கு சேகரித்து வரும் அப்துல் ஜலீல் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். நீட், கதிராமங்கலம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நின்றவர் என்பதால், மக்களின் செல்வாக்கு இவருக்கு அதிகம் உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு இலவச பட்டா, மகளிர் சுயத்தொழிலுக்கு அரசிடமிருந்து நேரடி கடன் உதவி, தரமான சாலைகள், மாணவ, மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மக்களை கவர்ந்துள்ளன.

2016 பெருவெள்ளத்தின் போதும், கொரோனா பெருந்தொற்றின் போது அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த அப்துல் ஜலீல், இந்தாண்டு மட்டும் 23 குழந்தைகள் படிக்க உதவி செய்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வரும் அவர், 6 ஆண்டுகளில் 63 குழந்தைகளின் இதய சிகிச்சைக்காக உதவியுள்ளார்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த திருமங்கலம் பகுதி தான். கடந்த 3 தலைமுறையாக நாங்க இங்க தான் இருக்கோம். நான் படிக்காதவன். அதனால் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு படிக்க வைக்கிறேன். இதையே என்னுடைய தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்துள்ளேன். தரமான சாலை, குடிநீர், சுகாதாரம் என்பது இப்பகுதியை பொறுத்தவரை மக்களுக்கு எட்டா கனியாக தான் உள்ளது. அதனால் சமூக ஆர்வலரா பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த எனக்கு, என் மக்களின் தேவைகளை அறிந்து உதவிடவே அரசியலுக்கு வந்துள்ளதாக” தெரிவித்துள்ளார், அப்துல் ஜலீல்.

அப்பகுதி மக்களிடையே நன்மதிப்பை பெற்ற அப்துல் ஜலீல், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையின் 104வது வார்டை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரியாக எனது வார்டை மாற்றுவேன் என உறுதி அளித்தார்.

Views: - 270

0

0