காவலாளியை கட்டிப்போட்டு தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி: வடமாநில கொள்ளையர்களா என விசாரணை

12 July 2021, 9:56 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றத்தில் காவலாளியை கட்டிப்போட்டு நிதிநிறுவனத்தின் ஷட்டரை துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஜிஎன்டி ரோடு நேதாஜி தெருவில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 20 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று அதிகாலை இந்த நிதி நிறுவனத்தில் காவலாளியாக இருந்த சிவானந்தம் என்பவரை கைகால்களை கட்டிப்போட்டு 6 பேர் கொண்ட கும்பல் ஷட்டரை வெல்டிங் இயந்திரம் கொண்டு துளையிட்டு கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் மர்ம கும்பல் சுதாரித்துக் கொண்டு உடனே அங்கிருந்து தப்பி ஓடியது. பின்னர் காவலாளி அருகில் உள்ள கட்டிடத்தின் காவலாளிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்து காவலாளியின் கட்டை அவிழ்த்து உதவினார்.

இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அங்குபொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். நிதி நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தபோது உள்ளே பணம் ஏதும் கொள்ளை போகவில்லை என காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து காவலாளியை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பல் வட மாநில கொள்ளையர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 105

0

0