தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு

5 July 2021, 4:59 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கச்சிக்குப்பம் கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒன்றை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்றையதினம் திருக்கோவிலூர் பகுதியில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. நேற்று தொடங்கிய மழை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையாக பெய்தது. மேலும் தொடர்ந்து நேற்று இரவிலும் கனமழை பெயது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கச்சிக்குப்பம் கிராமத்தில் இன்று கனமழையின் காரணமாக சக்திவேல் என்பவரது வீட்டின் சுவர் ஈரப்பதம் நிரம்பி இருந்தது. இதனை அறியாத சுவற்றின் அருகே அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை சரண்யா விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஈரப்பதம் நிறைந்திருந்த வீட்டு சுவர் விளையாடிக் கொண்டிருந்த சரண்யாவின் மீது திடீரென சாய்ந்தது.

இதில் சுவற்றின் அடியில் சிக்கிய குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டனர். பலத்த காயம் அடைந்த குழந்தையை திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக மதகடிப்பட்டு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை சரண்யா உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து திருக்கோவிலூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 34

0

0