மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 18 பேர் உட்பட 289 பேருக்கு தொற்று உறுதி..! : 7 பேர் உயிரிழப்பு
13 August 2020, 8:22 pmகோவை: கோவையில் மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 18 பேர் உட்பட 289 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரிகள் 300 பேருக்கு மூன்று கட்டங்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே 22 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மேலும் 18 வியாபாரிகளுக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவிர கோவை அரசு மருத்துவமனை 22 வயது பெண் பயிற்சி மருத்துவர், 3 மருத்துவப் பணியாளர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் 46 வயது ஆண் மருத்துவப் பணியாளர், பி.என்.பாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 30 வயது ஆண் காவலர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர போத்தனூர், ராமநாதபுரத்தில் தலா 9 பேர், பொள்ளாச்சியில் 8 பேர், செல்வபுரத்தில் 7 பேர், சூலூரில் 6 பேர், ரத்தினபுரி, மதுக்கரையில் தலா 5 பேர் உள்பட 289 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூல தொற்று பாதிப்பு காரணமாக கோவையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.