பருத்தி ஏலத்தினை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

20 July 2021, 3:53 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கிடங்கில் நடைபெற்ற பருத்தி ஏலத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி தெரிவித்ததாவது:- திருவாரூர் மாவட்டம், திருவாரூர் விற்பனைக்குழு கட்டுபாட்டில் உள்ள திருவாரூர் பூந்தோட்டம், குடவாசல், வலங்கைமான் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஜீன்-15ம் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. பிரதி செவ்வாய் கிழமை திருவாரூர் மற்றும் பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் பிரதி வெள்ளிகிழமை வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த மறைமுக ஏலத்தில் திருப்பூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கும்பகோணம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர்.

திருவாரூர் விற்பைனக்குழுவின் கீழ் இயங்கும் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 14631 குவிண்டாலும், பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3657 குவிண்டாலும், குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2598 குவிண்டாலும், வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 1458 குவிண்டாலும் ஆக மொத்தம் 22,345 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 16,200 மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை 14 கோடியே 51 இலட்சம் மதிப்பிலான பருத்தி ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7777, குறைந்தபட்சமாக ரூ.5000க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இவ்ஆய்வில் வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் மா.சரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி.ஹேமா ஹெப்சிபா நிர்மலா, வேளாண் விற்பனைக்குழு கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 79

0

0