இருளர் இன மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்: விரைவில் அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படும் என உறுதி

23 June 2021, 7:04 pm
Quick Share

தருமபுரி: பாலக்கோடு அருகேயுள்ள இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டையுடன் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருட்கள், சாதிச்சான்றிதழ்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கும்மனூர் ஊராட்சியில் உள்ள இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 52 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், 12 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, கொரோனா நிவாரண நிதி தலா 4000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள், 5 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள், வீடு இல்லா இருளர் இன மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் திவ்யத்ரசினி வழங்கினார்.
அதனை தொடர்ந்து பட்டா கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் விரைவில் வீடு கட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் அப்பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.

தற்போது 12 குடும்பங்களுக்கு புதிதாக மின்னணு குடும்ப அட்டையுடன் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாத தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதலில் ஆதார் அட்டை வழங்கிட வட்டாட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவுடன் விரைவில் அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படும். மேலும் இப்பகுதி மக்களின் கோரிக்கையான சாதிச்சான்றிதழ், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவிக்க ஏதுவாக தங்கள் பகுதியிலேயே வருவாய் துறை அலுவலர்கள் நேரிடையாக வருகை தந்து மனுக்களை பெற நாளை சிறப்பு முகாம் ஒன்றும் நடத்தப்படும்.

நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகள் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து வீட்டுமனை பட்டாக்கள் ஒதுக்கீடு செய்ய தெரிவு செய்யப்பட்ட இடத்தினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சின் போது வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 116

0

0