ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் தேவை:டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை

Author: Udhayakumar Raman
30 November 2021, 6:53 pm
Quick Share

மதுரை: ஸ்மார்ட் சிட்டி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதி குறித்து ஆய்வு செய்ய விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் உள்ள தனியார் உணவு விடுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் முக்கிய நகர்ப்புறங்களில் தான் இந்த மழை வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதே இதற்குக் காரணம். இந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளே நகர மக்களை நரக மக்களாக மாற்றியுள்ளது. சென்னை தூத்துக்குடி கோயமுத்தூர் போன்ற நகரங்களில் வாழ்கின்ற மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாகம் முற்றுமாக முடங்கிக் கிடக்கிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 2009ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி உண்மையிலேயே பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு தனியாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் தான் இந்த நகரங்களுக்கு விமோசனம் கிடைக்கும். இல்லாவிட்டால் இயற்கை பேரிடர்களிலிருந்து ஒருபோதும் தப்பிக்க இயலாது. இயற்கை சீற்றத்தை நாம் ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது. அவர் மேற்கண்ட திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அவற்றிற்குதான் செலவிடப்பட்டதா என்பது குறித்து முழுமையான ஆய்வு வேண்டும் என்றார்.

Views: - 157

1

0