குமரியில் கன்னிப்பூ சாகுபடியில் கண்டமான விவசாயிகள்

20 November 2020, 7:13 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழு விளைச்சல் பெற்றும் இன்னும் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால் விவசாயிகள் சோகத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கன்னிப்பூ சாகுபடி என்று அழைக்கப்படும் 4 மாத குறுகிய கால நெற் பயிர்கள் பயிரிடப்பட்டது .இந்த நெல் சாகுபடி ஜூன் மாதம் பயிரிடப்பட்டு செப்டம்பர் மாதம் அறுவடை செய்வது வழக்கம். தென்மேற்கு பருவ மழையை நம்பியே இந்த சாகுபடி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முழு விளைச்சல் பெற்ற நெற் பயிர்கள் ,பருவமழை காரணமாக அறுவடை செய்வதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை இயந்திரங்கள் வயலுக்குள் இறங்க சிரமப்பட்டன.

பெரும் சிரமத்துடன் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் , குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்னும் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது . இப்பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறுவடைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அடைமழை பெய்ததால் அறுவடை பின்தங்கியது.பின்னர் ஒரு சில வயல்களில் அறுவடை நடைபெற்றது.மீதம் உள்ள வயல்களில் அறுவடை தொடங்குவதற்கு முன்னர் அறுவடை இயந்திர தொழிலாளர்கள் தீபாவளிக்கு ஊருக்கு சென்று விட்டனர்.

விவசாயிகள் தொழிலாளர்களிடம் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி மும் அவர்கள் ஊருக்கு புறப்பட்டு விட்டனர். இதனால் வயல்களில் கம்பீரமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் நெற்பயிர்கள் மழையால் படுத்த கோலத்தில் காட்சியளித்தது. தற்போது இந்த நெற்பயிர்கள் அனைத்தும் முளைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தீபாவளியை கருப்பு தினமாகவே எண்ணினர் .இச் சம்பவம் விவசாயிகளை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 14

0

0