காய்கறிகள் விற்பனை செய்ததற்கு வாடகை தொகை வழங்காத மாநகராட்சி: பாதிக்கப்பட்ட பெண் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

Author: Udhayakumar Raman
24 June 2021, 2:32 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் கடந்த 2020 -ம் ஆண்டு கொரோனா முதல் அலையின்போது வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை செய்ததற்கு உரிய வாடகை தொகை வழங்கவில்லை எனக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முதல் அலை வீசியபோது கடந்த 2020ம் ஆண்டு முழு ஊரடங்கு எந்த எந்தவித தளர்வுகள் இன்றி செயல்படுத்தப்பட்டது. அப்போது திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திற்கு சென்று காய்கறிகள் விற்பனை செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து 200க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த வாகனங்களை பதிவு செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் காய்கறி வியாபாரம் செய்வதற்கு வாகனம் ஓட்டினார். இதற்காக மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு வாகன வாடகையாக ஒரு நாளைக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய் என நிர்ணயம் செய்து இருந்தனர்.

இதற்கான தொகை பலருக்கு வழங்கப்பட்ட நிலையில், 35 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு வாடகையில் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனிடையே இன்று திண்டுக்கல் மேற்கு மரிய நாதபுரத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் தனது வாகன வாடகை தொகை வராததை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, மாநகராட்சி தரப்பில் 36 ஆயிரம் ரூபாய் வரை வாடகை பாக்கி தர வேண்டியது உள்ளது என்றும், தற்போதைய புராண காலத்தில் வாகனம் ஓட்ட முடியாமல் வருமானமின்றி தவிப்பதால் தனக்குச் சேர வேண்டிய தொகையை மாநகராட்சி வழங்க வேண்டும்,

அவ்வாறு வழங்கினால் தனது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டு நல்ல உணவு சாப்பிட முடியும், எனவே தனக்கு சேர வேண்டிய தொகையை வழங்க வேண்டும் என கோரினார். அப்போது அங்கு வந்த மாநகராட்சி ஆணையர் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைவில் பணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அந்தப் பெண் தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

Views: - 212

0

0