கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்படும்: முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி…

24 August 2020, 11:21 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: எந்த பகுதியில் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதிகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கொரோனா நடவடிக்கைகள் தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டசபை அமைச்சரவை அறையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், முதல்வரின் செயலர் விக்ராந்த் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலம் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு செயலர்கள், டிஜிபி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள், மாகி மற்றும் ஏனாம் மண்டல நிர்வாகிகள், மருத்துவ அதிகாரிகள் பங்கேற்று முதல்வருடன் கலந்துரையாடினார்கள்.

கூட்டத்தின் முடிவில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:- புதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறி கடந்த 15 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுவதும், சமூக இடைவெளி கடைபிடிக்காதும், திருமண நிகழ்ச்சிகளில் 400, 500 பேர் பங்கேற்பதும் தொற்று பரவ முக்கியமான காரணமாக உள்ளன. இதுமட்டுமல்லாமல், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணித்தாலும் கூட, அவர்கள் வெளியே உலவுகின்றதால் அவர்களது குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் தொற்று அதிகமாக பரவுகிறது.

ரூ.1.4 கோடிக்கு ஆன்டிஜென் கிட்டும், ரூ.1.2 கோடிக்கு ட்ரூநாட் இயந்திரத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதற்கான கருவி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டிஜென் கருவி மூலமாக 30 நிமிடத்திலும், ட்ரூநாட் கருவி மூலமாக 4 மணி நேரத்திலும் பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் காரைக்கால், மாகே, ஏனாமில் உள்ள மருத்துவமனைகளிலேயே கொரோனா பரிசோதனை செய்து விரைவாக முடிவை கண்டறிய முடியும். தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை உடனடியாக நியமிக்கவும், தேவையான ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மக்களுடைய வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டி இருக்கிறது. ஒருபுறம் எந்த பகுதியில் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதிகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த பகுதிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரத்திலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளோம். அதன் அடிப்படையில் திங்கள் கிழமை இரவு 8 மணியிலிருந்து புதன்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளோம். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கை அறிவித்து புதுச்சேரி, காரைக்காலில் நடைமுறைப்படுத்தினோம். அதனை மக்கள் முழுமையாக கடைபிடித்தார்கள்.

இதன் மூலம் கொரோனா தொற்று ஓரளவு பரவுவதை கட்டுப்படுத்தி உள்ளோம். ஊரடங்கு உத்தரவால் மட்டும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்திவிட முடியாது. மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். எனவே, மக்கள் விதிகளை கடைபிடித்தால்தான் கொரோனா தொற்றை புதுவையில் ஒழிக்க முடியும். ஏற்கனவே அறிவித்தப்படி நாளை (24ம் தேதி) முழு ஊரடங்கு அமலில் இருக்கும். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகிற 31ம் தேதி வரை தினமும் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். சமுக வலைதளத்தில் சில உண்மைக்கு புறமான தகவல்களை கூறி இருக்கிறார்கள். கடந்த ஏப்ரலில் மத்திய அரசு முழு ஊரடங்கு அறிவித்தபடி நான் கொடுத்த பேட்டியை போட்டு புதுச்சேரியில் இந்த வாரம் வரை ஊரடங்கு இருக்கும் என்று சில விஷமிகள் செய்து வருகின்றனர். இது யார் என்று கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று மக்கள் மத்தியிலும், வியாபாரிகள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற கூட்டம் புதுச்சேரியில் உள்ளது.

இதை தவிர்க்க வேண்டும். இது மக்களுடைய உயிர் சம்பந்தமான பிரச்னை. இதனை கருத்தில் கொண்டு பொய்யான செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். உதவியாளருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருப்பதாக முடிவு வந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் எனக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது என்றார்.

Views: - 0 View

0

0