ரவுடி படப்பை குணாவால் உயிருக்கு ஆபத்து: டிஎஸ்பி அலுவலகத்தில் இளம்ஜோடிகள் தஞ்சம்

Author: kavin kumar
22 October 2021, 8:30 pm
Quick Share

காஞ்சிபுரம்: பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணாவால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இளம்ஜோடிகள் ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 01.04.2021 அன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலத்தைச் சேர்ந்த குகன் மற்றும் ஞான பிரியா வீட்டை விட்டு வெளியேறி சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு சட்டப்படி பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா இவர்களை ஆணவ கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக இளம் ஜோடிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையினருக்கு புகார் அளித்திருந்தனர்.
அவர்களுடைய புகாரின் மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தகுந்த பாதுகாப்பு இல்லாத இருவரும் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் மேல் மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள குகன் என்பவரின் வீட்டில் தங்கியிருந்து அதே கிராமத்தில் இருவரும் வாழ விரும்புகின்றனர்.
அதனால் இன்று மதுரமங்கலம் கிராமம் செல்ல இருப்பதால் படப்பை குணாவால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எங்களை காப்பாற்றி நல்ல முறையில் வாழ உதவி செய்ய வேண்டும் என்றும்,

படப்பை குணா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். டிஎஸ்பி மணிகண்டன் அங்கு இல்லாத காரணத்தால் அலுவலகத்திலுள்ள காவல்துறையினர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு செல்ல வற்புறுத்தியதால் டிஎஸ்பி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி மணிகண்டன் குகன் மற்றும் ஞான பிரியாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை மதுரமங்கலத்தில் உள்ள குகன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் பிரபல ஏ ப்ளஸ் ரவுடி படப்பை குணா மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பாக ஜெயிலுக்கு சென்று போலி ஆவணங்களை அளித்து பெயிலில் வந்து தலைமறைவாக இருந்து கொண்டே வார்டு கவுன்சிலர் போட்டிக்கு யாருக்கும் தெரியாமல் வந்து மனுத்தாக்கல் செய்து வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் துணை உடன் சேர்மனின் பதவியை பிடிக்க முயற்சிக்கின்றார்கள் என்பது கூடுதல் தகவல்.

Views: - 138

0

0