லஞ்சம் வாங்கிய நன்னிலம் வட்டாட்சியர் கைது

24 February 2021, 8:29 pm
Quick Share

திருவாரூர்: பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது நன்னிலம் வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்கு லட்சுமி பிரபா என்பவர் வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று பேரளம் பகுதியில் எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்றை மறித்துள்ளார். லாரியில் இருந்த ஓட்டுநரிடம் ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு லாரியின் உரிமையாளர் குமார் திருவாரூர் தலைமை தபால் நிலையம் அருகே வைத்து பணம் தருவதாக வட்டாட்சியர் லட்சுமி பிரபாவிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து லட்சுமி பிரபா தனது அரசு வாகனத்தில் ஓட்டுநர் லெனின் என்பவருடன் திருவாரூர் தலைமை தபால் நிலையம் சென்றுள்ளார். இதற்கு முன்னதாக லாரி உரிமையாளர் குமார் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தபால் நிலையம் அருகே மறைந்திருந்தனர். குமார் வட்டாட்சியர் லட்சுமி பிரபாவிடம் லஞ்சம் கொடுக்கும் போது வட்டாட்சியரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடித்தனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தபால் நிலையத்தின் உள்ளே வைத்து வட்டாட்சியர் லட்சுமி பிரபாவிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாட்சியர் மற்றும் அவரது வாகன ஓட்டுனர் லெனின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். திருவாரூர் நகர்ப்பகுதியில் வட்டாட்சியர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 1

0

0