வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ 30,600 ரொக்கம் பறிமுதல்

11 November 2020, 2:26 pm
Quick Share

சென்னை: மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ 30,600 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை புழல் பாலாஜி நகரில் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வட்டாட்சியராக நிலா மற்றும் சிறப்பு தாசில்தாராக முருகானந்தம் உட்பட தேர்தல் பிரிவு வருவாய் பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு தீபாவளியை ஒட்டி ஊழியர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் அங்கு வரும் முக்கிய பிரமுகர் மற்றும் புரோக்கர்கள் மூலமாக பணத்தை வாங்கியும் மேலும் பட்டா உள்ளிட்ட சான்றிதழ் வழங்குவதாக லஞ்ச பணமும் பெற்றதாக கூறப்படுகிறது.

இத்தகவல் லஞ்ச ஒழிப்பு கூடுதல் ஆணையாளர் லாவண்யாவுக்கு ரகசிய தகவல் வந்ததின் அடிப்படையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட உதவி ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 13 பேர்கள் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதனால் அலுவலகத்தின் முகப்பு கிரில்கேட் மூடப்பட்டு அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் உள்ளே நுழைந்து வெளிக்கதவை பூட்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு அதிகாரிகள் வந்த விவரம் தெரியவே கையிலிருந்த பணத்தை ஜன்னல் வெளியே தூக்கி வீசினர்.

தொடர்ந்து சுமார் 8 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் தாசில்தார் அறையிலிருந்த 30,600 ரூபாய் ரொக்கமும். 11 இனிப்பு பெட்டிகளும் கைப்பற்றப்பட்டது. இது பற்றிய தகவல் மேலதிகாரிகளுக்கு தெரியப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் இச்சோதனை சம்பந்தமாக மேலதிகாரிகளின் விசாரணையில் இதுபற்றிய தகவல் வெளிவரும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிடுவது தெரிந்தவுடன் அருகிலுள்ள நகல் பிரதி எடுத்து கொடுக்கும் கடைகளும் டீக்கடைகளையும் மூடி விட்டு வியாபாரிகள் நைசாக அங்கிருந்து நழுவி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 22

0

0