கோவில் யானைக்கு மாற்று இடம் தர பக்தர்கள் கோரிக்கை

20 September 2020, 1:14 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோவில் யானை கோதையை புதிய கட்டடத்துக்கு மாற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் தொன்மையான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இக்கோவில் நிா்வாகத்தால் 22 வயதாகும் ‘கோதை’ என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் இந்த யானை பங்கேற்கிறது. கோவிலுக்கு அருகே உள்ள மண்டபத்தின் ஒரு சிறிய அறையில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இட நெருக்கடியுடன் உள்ள இந்த மண்டபத்தில் சிறிய அறையில், கோதை அடைக்கப்பட்டிருப்பதாக பக்தா்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இதையடுத்து, யானைக்காக வனத்துறையின் பராமரிப்பு விதிகளின்படி ரூ.19.50 லட்சத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ஜீயா் தோப்பு மண்டபத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கியது. இப்பணிகள் முடிவடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் கோவில் யானை புதிய கட்டடத்துக்கு இன்னும் மாற்றப்படாமல் இட நெருக்கடியுடன் கூடிய அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளது. யானையை புதிய கட்டடத்துக்கு மாற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Views: - 6

0

0