சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Author: Udayaraman
16 October 2020, 3:20 pm
Quick Share

விருதுநகர்: பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி அமாவாசை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.இந்த கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்குச் சென்றால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கடந்த காலங்களில் சதுரகிரி கோவிலுக்கு தினந்தோறும் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பெளர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.

இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி முதல் வரும் 17 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இன்று புரட்டாசி அமாவாசை என்பதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கோயில் நிர்வாகம் எதிர்பாராத அளவிற்கு கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் திணறி வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Views: - 41

0

0