இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து:11-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
2 September 2021, 1:56 pm
Quick Share

தருமபுரி: அரூரில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் கன்னியப்பன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். தொடர்ந்து கொரோனா விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியப்பன் நேற்று முதல் நாள் பள்ளி திறப்பு என்பதால் தனது வீட்டிலிருந்து அரூர் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு வந்துள்ளான். தொடர்ந்து மாலை பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளான். அப்பொழுது தனது சித்தப்பா மகளை அழைத்து செல்வதற்காக அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளான்.

அப்பொழுது அரசு மகளிர் மேல் நிலை பள்ளி அருகில் சேலம் அரூர் தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து திருவண்ணாமலை சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இந்த விபத்தில் 11-ம் வகுப்பு மாணவன் கன்னியப்பன், தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த மாணவன் கன்னியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி திறந்த முதல் நாளில், உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவன் வீட்டிற்கு செல்லும் போது சடலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 240

0

0