கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு: அடிமாடுகளாக மாடுகளை விற்பனை செய்யும் அவலம்…

14 April 2021, 6:56 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காததால், மாடுகளை அடிமாடுகளாக விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது

தருமபுரி மாவட்ட மக்களின் பிரதான தொழில் விவசாயம் மட்டுமே, கடந்த சில ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில், போதிய மழை பெய்யாததால், விவசாயம் பொய்த்து போனது. இதனால் விவசாயத்திற்கு மாற்று தொழிலாக ஆடு,மாடு, எருமை போன்ற கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். இதில் பெரும்பாலன விவசாயிகள் தங்கள் வளர்க்கும், ஆடு,மாடுகளை அருகே உள்ள வனப்பகுதிகளில் மேய்சலுக்கு விடுவது வழக்கம்.

தற்போது போதிய மழை இல்லாததால், விவசாய நிலங்களும் வறண்ட நிலையில், வனங்களும் வறண்டதால், கால்நடைகளுக்கு தீவனம் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளை அழைத்து சென்று தீவனத்தை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவனதட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்கள், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியபாரிகள் தீவனப்புல் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.

விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனப்புல் 300 முதல் 500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி போடுகின்றனர். விலை கொடுத்து வாங்க முடியாத விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளை அடிமாடுகளாக குறைந்து விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில், தீவனபுல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 18

0

0