தனியார் நிதி நிறுவனத்தில் பெண் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

4 September 2020, 7:53 pm
Quick Share

தருமபுரி: தனியார் நிதி நிறுவனத்தில் சரக்கு வாகன கடன் வாங்கிய இளநீர் வியாபாரி மனைவி மனமுடைந்து, நிதி நிறுவனத்திலே பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள உழவன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி. இவர் தருமபுரி நகரில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழில் தேவைக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு சின்னசாமி, தருமபுரியில் உள்ள தனியார் நுண் நிதி நிருவனத்தில் மகேந்திரா பிக்கப் சரக்கு வாகனம் வாங்குவதற்காக ரூபாய் 6 லட்சம் கடன் வாங்கியிருந்துள்ளார். தொடர்ந்து மாதத் தவணையாக ரூபாய் 17 ஆயிரத்து 250 வீதம் ஒன்பது மாதங்கள் தவணை செலுத்தி உள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இளநீர் வியாபாரம் செய்ய முடியாத நிலையில், வருவாய் இல்லாமல், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த நான்கு மாதங்களாக கடனுக்கான மாதத்தவணை தொகை செலுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து, தனியார் நுண் நிதி நிறுவனத்தில் சின்னசாமி வாங்கிய கடனுக்காக அவரது சரக்கு வாகனத்தை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்து வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து சின்னசாமி பணம் செலுத்துவதாக பலமுறை நிதி நிறுவனத்தை முறையிட்டுள்ளார். ஆனால் வாகனம் ஏலம் விடப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இன்று சின்னசாமி தனது மனைவி ஜெயலட்சுமி உடன் தருமபுரிக்கு வந்து தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் பணம் கட்டுவதாக முறையிட்டுள்ளார். ஆனால் நிதி நிறுவனம் வண்டி இல்லை என தெரிவித்ததால், மனமுடைந்து சின்னசாமி மனைவி ஜெயலட்சுமி உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தடுத்து தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து நிதி நிறுவனத்தினர் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். தருமபுரி நிதி நிறுவனத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 8

0

0