வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது: எதிர்பாரதவிதமாக நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வனவர் உள்ளிட்ட இருவர் காயம்

Author: Udhayakumar Raman
22 July 2021, 3:55 pm
Quick Share

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர்களை பிடித்தபோது, எதிர்பாரதவிதமாக நாட்டு துப்பாக்கி வெடித்ததில் வனவர் உள்ளிட்ட இருவர் காயம் அடைந்தனர். மேலும் வேட்டையாட வந்த இருவரையும் வனத் துறையினர் கைது செய்து, நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட கீழ்மொரப்பூர், கொளகம்பட்டி, இராமியணஹள்ளி, கெவரமலை காப்பு காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாட வருபவர்களை தடுப்பதற்காக, இரவு நேரங்களில் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு மொரப்பூர் வனச்சரகர் சிவகுமார் தலைமையில், வனவர் வேடியப்பன், ஞானவேல் ராஜா உள்ளிட்ட வனத் துறையினர் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியம்பட்டி அருகே உள்ள கெவரமலை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வனப் பகுதியில், வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் இருவர் சுற்றித்திரிந்து கண்டனர்.

வனத் துறையினரை கண்டதும் அவ்இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது வனத் துறையினர் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்தனர். அப்போது வேட்டையாட வந்தவரின் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி, எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதில் வனவர் வேடியப்பன் நெற்றியில் குண்டு பட்டு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் வன விலங்குகளை வேட்டையாட வந்த குமார் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடத்தூர் அடுத்த நொச்சிக்குட்டை பகுதியை சேர்ந்த குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் வனத் துறையினர் கைது செய்து,

அவர்களிடமிருந்து வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் காயமான வனவர் வேடியப்பன் மற்றும் வேட்டைக்காரன் குமார் இருவரையும் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து முதல் உதவிக்குப் பிறகு வேட்டைக்காரர்கள் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் வனத் துறையினர் கோபிநாதம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இத்னை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Views: - 312

0

0