காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

22 November 2020, 9:49 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ்சுதீன் என்பவர் வார விடுமுறையில் ஒகேனக்கல் பகுதிக்கு தனது குடும்பத்தினர் 4 பேருடன் சுற்றுலா வந்துள்ளார். சுற்றுலா வந்தவர்கள் ஒகேனக்கல்லில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு ஒகேனக்கல் அருகே உள்ள ஆலாம்பாடி என்கிற பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தனது குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ரியாஸ்சுதீன் மனைவி அபிதா (38), மகள் ஹப்பா பாத்திமா (14) மற்றும் மகன் முகமது ரபாக் (9), ஆகியோர் காவிரி ஆற்றில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து ரியாசுதீன் தனது மனைவி மற்றும் குழந்தைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது குறித்து ஒகேனக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பரிசல் மூலம் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஒகேனக்கல் பகுதியில் காவிரி கரையோரத்தில் நாடார்கொட்டாய் என்னும் இடத்தில், தாய் அபிதாவின் உடல் கரை ஒதுங்கி சடலமாக மீட்கப்பட்டது.

மேலும் இரு குழந்தைகளின் உடல்களை தீயணைப்பு துறையினர் இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியை நிறுத்திவிட்டுள்ளனர். நாளை காலை மீண்டும் தீயணைப்பு துறையினர் தேடும் பணியை துவங்க உள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் இரு குழந்தைகள் நீர் மூழ்கிய சம்பவம் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0