மருத்துவக் கல்லூரி மாணவருக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்…

14 August 2020, 10:32 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவருக்கு இறுதியாண்டு கட்டணத்தை செலுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் படிக்க உதவினார்.

திருப்பத்தூர் அடுத்த குருசிலாபட்டு பகுதியைச் சார்ந்த ஓட்டுநர் மகன் நரேந்திரன், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில் ஏழை குடும்பத்தை சேர்ந்த மருத்துவ மாணவனின் பெற்றோருக்கு, கொரோனா பொதுமுடக்கத்தால் போதிய வருவாய் இல்லாததால், இறுதியாண்டு பயில்வதற்கான கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நரேந்திரனின் கிராமத்து நண்பர் ஒருவர், ஏழை குடும்பத்தை சேர்ந்த மருத்துவ மாணவருக்கு இறுதியாண்டு கட்டணம் செலுத்த உதவிக்கரம் கேட்டு, சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவ மாணவனின் விவரங்களை கேட்டு, இறுதி ஆண்டு கட்டணம் செலுத்த தேவைப்படும் உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மருத்துவமனை முதல்வர் மற்றும் பேராசிரியர்களுடன் கொரோனா தொற்று குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து திருப்பத்தூரை சேர்ந்த மருத்துவ மாணவன் நரேந்திரனின் இறுதியாண்டு கட்டணத்தை தானே செலுத்துவதாக கூறி மாணவனை அழைத்து, இறுதியாண்டு கட்டணத்திற்கு ரூ.40 ஆயிரத்தை, மருத்துவ மாணவரிடம் வழங்கினார். தொடர்ந்து மாணவன் நரேந்திரனிடம் நன்றாக படித்து, ஏழ்மையில் உள்ள குடும்பங்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் எனவும், இதேபோன்று பல ஏழைப் பிள்ளைகளின் படிப்பிற்கு நீயும் உதவி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி செந்தில்குமார், தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று குறைவான மாவட்டமாக தருமபுரி உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இறப்பு சதவீத குறைந்த அளவே உள்ளது. தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர் இறுதியாண்டு படித்து வருகிறார். மேலும் கட்டணம் செலுத்த முடியாததால் இறுதியாண்டு தேர்வு எழுத முடியாத சூழ்நிலையில் இருந்தார். படிப்பிற்கான உதவி கேட்டு சமூக வலைத்தளத்தில் வந்த கோரிக்கையை ஏற்று, ரூ 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கி உள்ளேன்‌. என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்து வருகிறேன் .மேலும் உதவி கேட்பவர்கள் தொகை பெரியதாக இருக்கும் போது, மற்றவர்கள் உதவி பெற்று அவர்களுக்கு முடிந்த உதவியை செய்து வருவதாக எம்பி செந்தில்குமார் தெரிவித்தார்.

Views: - 2

0

0