மீண்டும் தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமை: உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார்

Author: Udhayakumar Raman
23 September 2021, 5:29 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் கந்து வட்டி வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட பெண் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லூர்துபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஷீபா இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் கடந்த 2019 ம் ஆண்டு அதே கிராமத்தில் இயங்கி வரும் சிவானி பைனானசின் உரிமையாளர்கள் எலிசிபெத் ராணி, அவரது கணவர் ஜான் பாபு என்பவரிடம் தங்களது விவசாய தேவைக்காக ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்று இதுவரை தாங்கள் வாங்கிய கடனுக்காக அசல் வட்டி என சேர்த்து ஷீபா தனது தாலி முதற்கொண்டு அனைத்து நகைகளையும் விற்று ரூபாய் 20 லட்சம், கொடுத்தும், மேலும் 7 லட்சம் ரூபாய் தரவேண்டும் என தங்களை ஜான்பாபு அவரது மனைவியும் அடியாட்களை வைத்து நிர்பந்தம் செய்து வீட்டிற்கு வந்து மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த ஒரு ஆண்டாக பல முறை பொம்மிடி நடூர் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து இன்று மீண்டும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது இரு குழந்தைகளுடன் வந்த ஷீபா தங்கள் குடும்பத்தாரை எலிசிபெத் ராணி அவரது கணவர் ஜான் பாபு ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாசமாக பேசி வருகின்றனர். என்னுடைய குழந்தைகளை கடத்தி சென்று விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இல்லையேல் தங்களது வீட்டை விற்று பணம் தர வேண்டும் என கூறிவருகின்றனர். ஆகையால் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்கள் குடும்பத்தை சேர்நதவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பைனான்ஸ் என்ற பெயரில் ஜான் பாபு அப்பகுதிகளை சுற்றி உள்ள விவசாயிகள் மற்றும் ஏழை பொது மக்களிடம் கடன் கொடுத்து அதிக வட்டி வசூல் செய்வதும், கொடுக்க இயலாதவர்களை மேலும் மேலும் அடியாட்களை வைத்து மிரட்டியும் வருகிறார். காவல் துறையினரிடம் கடன் பெற்றவர்கள் புகார் அளித்தும் இதுவரை ஜான்பாபு மீது காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கந்து வட்டி கொடுமையால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அறங்கேறி உள்ளது. இருப்பினும் தமிழக அரசு பல்வேறு சட்ட நடவடிக்கை எடுத்ததின் காரணமாக சற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் தருமபுரி மாவட்டத்தில் அவ்வபோது கந்து வட்டியால் பாதிக்கபடுவது வேதனையளிக்கிறது. இதுபோன்ற கந்து வட்டி வசூல் செய்யும் நபர்கள் மீது காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Views: - 182

0

0