ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: வேல்முருகன் பேட்டி

26 November 2020, 5:41 pm
Quick Share

தருமபுரி: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை செய்யவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அலட்சியப்படுத்திய ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அக்கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை செய்யவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பியும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ள ஆளுநரின் இந்த செயலை மிகவும் கண்டிப்பதாகவும்,

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அலட்சியப்படுத்திய ஆளுநரை தமிழக அரசு உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் மத்திய அரசு உடனே அவரை திரும்ப பெற வேண்டும். மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுபடி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்பதை தமிழக முதல்வர் இருபதாம் தேதி மாலை தான் அறிவித்தார். ஆனால் அன்று காலையே தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுகவும்,

கலைஞர் அறக்கட்டளையும் ஏற்கும் என்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு தமிழக முதல்வர் அவசர அவசரமாக போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தார் என்றும், அந்த இட ஒதுகிட்டின் விளைவாக பதினெட்டாம் தேதி நடைபெற்ற கவுன்சிலிங்கில் பல ஏழை மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் தனியார் கல்லூரியில் சேர போதிய பண வசதி இல்லாததால் அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள். அவ்வாறு தனியார் மருத்துவக் கல்லூரியிலே இடம் கிடைத்தும்,

சேர இயலாத மாணவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக இந்த ஆண்டு அவர்கள் தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கானகல்வி கட்டண அரசாணையை தமிழக அரசு சுகாதாரத் துறையும், ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எந்தவிதமான செயல்திட்டங்களையும், செய்யாமல் குறிப்பாக கமிஷன் ஒன்றிலேயே குறியாக உள்ளதாக குற்றம்சாடிய அவர், முதல்வர் அவர்கள் கமிஷனுக்காக பாலங்களை மட்டும் கட்டி வருகிறார் என்று கூறினார். தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவிப்பது வெறும் கண்துடைப்பே என்றும் கூறினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் வரும் உபரி நீரை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இன்றி குடியிருக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா வழங்க வேண்டும், இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை அறிவிக்கும் என்று கூறினார். மேலும் அவர் கூறும் பொழுது தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் உள்ளாட்சித் தேர்தலின் போதும் திமுகவுடன்கூட்டணி சேர்ந்து போட்டியிட்டதாகவும் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறினார்.

Views: - 13

0

0