தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு

24 November 2020, 2:16 pm
Quick Share

நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மிககன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே புயல் பாதிக்கக்கூடும் என கண்டறியப்பட்ட 195 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு சார்பில் பொதுமக்களை பாதுகாப்பாக வைப்பதற்கு 281 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 349 பாலங்கள் 5,258 சிறு பாலங்கள் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தடுத்திட 9,500 க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாக்குப் பைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு சவுக்கு மரங்கள் மற்றும் சவுக்கு கறிகளும் அவற்றை பராமரிப்பதற்கான ஆட்களும் உள்ளனர். 43 மரம் அறுக்கும் இயந்திரம், 23 லாரிகள், 21 டிராக்டர், 23 ஜேசிபிகள், 15 புள் டவுசர், பம்புசெட்டுகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல அனைத்து அரசு அலுவலர்களும் எப்போதும் பணி செய்யும் வகையில் தயார் நிலையில் இருக்கின்றனர். தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகளான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும்,

வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பத்திரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்வதற்காக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென்னை மரங்கள் வாழை உள்ளிட்ட பயிர்களை பராமரிப்பதற்காக தேவையில்லாத கிளைகளை வெட்டி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக செலுத்தி பயிரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 0

0

0