400 ஆண்டுகள் பழமையான சிற்பங்களுடன் கூடிய நடுகற்கள் கண்டிபிடிப்பு…

Author: Udhayakumar Raman
19 September 2021, 5:57 pm
Quick Share

மதுரை: உசிலம்பட்டி அருகே மண்ணில் புதைந்த நிலையில் இருந்த ராணி மங்கம்மாள் சிற்பம் கொண்ட நடுகல்லை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து மீட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடையபட்டி மலைக் குன்று பகுதியில் பழமையான நடுகல் சிற்பங்கள் இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜனுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காந்திராஜன் தனது குழுவினருடன் சென்று ஆய்வு செய்தார்.அங்கு 3 நடுகல் கல்வெட்டுகளுடன் இருப்பதைக் கண்டறிந்தனர். இதில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த ராணி மங்கம்மாள் தோற்றம் கொண்ட சிற்பத்துடன் கூடிய நடுகல்லையும்., வேட்டை சமூகம் இந்த பகுதியில் வாழ்ந்தற்கான அடையாளமாக வேடன் வில் அம்புடனும் அவரது மனைவி மற்றும் வேட்டையாடும் விலங்குகள் கொண்ட நடுகல் தமிழ் கல்வெட்டுகளுடன் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கோவில்களில் மட்டுமே காணப்படும் கலை நயமிக்க சிற்பங்களுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ராஜா குதிரையில் செல்வது போன்றும் அவரின் அருகே ராணி, குடை பிடிப்பவர், முன்புறம் ஒரு காவலாளி, பின்புறம் ஒரு காவலாளி என கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட இது போன்ற நடுகற்கள் அரிதானவை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவை சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமையானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சேரநாட்டுக்கு செல்லும் பெருவழிப்பாதையாக இருந்த இந்த பகுதியில் தொடர்ந்து பல்வேறு வகையான தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வரும் சூழலில் விரிவான அகழாய்வு மேற்கொண்டால் மேலும் பல தொல்லியல் எச்சங்கள் வெளிப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 134

0

0