பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

Author: Udhayakumar Raman
8 September 2021, 7:53 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் தனியார் தங்கும் விடுதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் சிவகாசி செல்லும் சாலையில் தனியார் உணவு விடுதி ஒன்று செயல்படுகிறது. இந்த விடுதியின் ஒரு அறையில் தங்கியிருந்த திருமலை ராஜன்(40) என்பவர் நேற்று மாலை முதல் இன்று காலை வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லை. சந்தேகத்தின் பெயரில் விடுதி ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தங்கியிருந்த நபர் மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாகக் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விடுதி உரிமையாளர் ஆமத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆமத்தூர் காவல் துறையினர் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இறந்தவர் திருமலை ராஜன் என்பதும், அவரது மனைவி அரசுப் பள்ளி ஆசிரியை இவருக்கு இரண்டு மகள்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்து கொண்ட திருமலைராஜன் திருப்பூரில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும், கடந்த 2016ஆம் ஆண்டு மேட்டமலையில் கொலை சம்பவத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்ட காரணமாக இவர் பணியிடை நீக்கத்தில் இருப்பதாகவும், தனது குடும்பத்துடன் விருதுநகர் லட்சுமி நகரில் தற்போது வசித்துவரும், இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்த விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இவர் இறப்பிற்கான காரணம் குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 142

0

0