ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடித்து அகற்றம்

16 September 2020, 3:25 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. 

காஞ்சிபுரம் பெருநகராட்சி 1 வது வார்டு பஞ்சுப்பேட்டை பெரிய தெரு பகுதியில் பிரபல கோவிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் பரப்பளவில் காலியிடங்கள் உள்ளது. ஓணகாந்தேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மனையில் கடைகள், வீடுகள், கழிவறைகள், குளியலறைகள் ஆகியன ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்வாடகைக்கு விடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் மக்களும் இந்த ஆக்கிரமிப்புகளை சாதகமாக்கி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கற்களை வைத்தும், கம்புகளை நட்டு வைத்தும் இடம் பிடித்தனர்.

சுமார் 150க்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடத்தை பிடிக்க முயற்சித்ததை கேள்விப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்காக கோயில் செயல் அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் வந்தனர். அப்போது, அந்த வீட்டில் இருந்த பொருள்களை அகற்றி ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு கட்டடத்தை இடித்து தள்ளினர். அந்த வீட்டில் வசித்து வந்தவரின் எதிர்ப்பையும் மீறி அக்கட்டடம் இடித்து தள்ளப்பட்டது.

அதேவேளையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை ஒன்று அதிகாரிகளின் வருகையையொட்டி பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக செயல் அலுவலர் அறிவுறுத்தலின்படி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பணியாளர்கள் கடையின் பூட்டை உடைத்து கடையிலிருந்த  பொருள்களை வெளியேற்றினர். தொடர்ந்து அந்த கட்டடமும் இடிக்கப்பட்டது. பின்னர் இந்த இடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.