கோவையில் பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு

7 September 2020, 10:34 pm
Cbe Collector Request - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் பழைய கட்டிடங்கள் நீண்ட காலமாக உபயோகம் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த கூடிய அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை இடித்து அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்து உள்ள கட்டிடங்கள் மற்றும் நீண்ட காலமாக உபயோகமில்லாமல் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஆனாலும் ஆங்காங்கே சில கட்டிடங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் அவை இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

எனவே கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் மிகவும் பழுதடைந்து உள்ள அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் ஆபத்து விளைவிக்கக்கூடிய கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த அதன் உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற கட்டிடங்கள் உள்ளதா என்பதை உள்ளாட்சி அமைப்பு அலுவலர், வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்திற்குள் மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தாத உரிமையாளர்கள் மீது உரிய விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் முன்னேற்றம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழை காலம் நெருங்குவதால் மேற்படி பணியை உடனடியாக செயல்படுமாறு அனைத்து வருவாய் துறை, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 4

0

0